Search This Blog

Tuesday, June 21, 2011

திருவள்ளுவர்


முன்னுரை:
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர  நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன.
திருவள்ளுவர் வரலாறு:
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர்.
திருவள்ளுவர் காலம்:
         அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

Friday, June 17, 2011

63. விறன்மிண்ட நாயனார்

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை

சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனையபற்றெல்லாவற்றையும் முற்றாகத் துறந்தவர். சிவனடியாரிடத்தே பெரும் பக்தி பூண்டவர்.
திருத்தலம் தோறும் சென்று வழிபாடாற்றும் வழக்கமுடைய இப்பக்தர் முதலில் திருக்கூட்டத்தை வணங்கிப் பின்னரே கோயிலுட் சென்று வழிபடும் நியமத்தினர். இக்கொள்கையை விடாதுபின்பற்றும் விறன்மிண்டர் சேரநாட்டுத் தலங்களை வழிபட்டு சோழநாட்டுத் திருத்தலங்களையும் வணங்கும் காதலால் திவாரூர்த்தலத்தை அடைந்து அங்கு சில நாள் தங்கினார். அந்நாளில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த திருக்கூட்டத்தைக் கண்டு ஒருவாறு ஒதுங்கிச் சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் கண்ணுற்றதும், ‘இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுட் செல்கின்றாதானதால் திருக்கூட்டத்திற்கு இவனும் புறகு; இவனையாண்ட சிவனும் புறகு என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று” வேண்டுதல் செய்தார். அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார்.
இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறண்மிண்டநாயனார், பெருமாள் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.

62. வாயிலார் நாயனார்

வாயிலார் என்னும் பெயர் பெற்ற நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் “தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும். இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே. இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,
மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்

கூறுகின்றார். இதில் “தன்மை வாயிலார் என்னும் தபோதனர்” என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் “நான்” என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை “தன்மை வாயிலார்” என்பது குறிக்கும். தன்மை என்பது “நான்” என்பதைக் குறிப்பது.
வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு.
மார்கழியில் இரேவதி நாள்மீன் கூடும் நாளில் குருபூசை என்னும் வழக்கம் உண்டு 2008 ஆண்டில் வாயிலாரின் திருநட்சத்திரம் மார்கழி 29 (ஜனவரி 14) ஆம் நாள் வருகின்றது.

61. மெய்ப்பொருள் நாயனார்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” – திருத்தொண்டத்தொகை.

மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.
இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான்.

60. மூர்த்தி நாயனார்

"மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை

மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் எனக் கொண்ட கொள்கையினாராய் வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.
அந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது அடிமைத்திறம் செல்லவொட்டாது தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாரையும் பல கொடுமைகள் செய்தான்.

59. மூர்க்க நாயனார்


மூர்க்கற்கும் அடியேன்” – திருத்தொண்டத்தொகை

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார்.
இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற நற்சூதினால் பொருளாக்க முயன்றனர். தம்மூரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.
பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது. நாடோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.
இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

58. முனையடுவார் நாயனார்

அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை

 முனையடுவார் நாயனார் சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர்; போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலி பேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித் கொண்டிருந்தார். முனையடுவார் நாயனார் நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.

57. முருக நாயனார்

“முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அவ்வக் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார். சிலநாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர்கொள்ளும் புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர். அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.
திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகநாயனார், திருநல்லூரிப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமணவிழாவிற் கலந்துகொண்டு தங்கள் பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார்.

56. மானக்கஞ்சாற நாயனார்

"மலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன்" – திருத்தொண்டத் திருத்தொகை

மானக்கஞ்சாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார்.
மானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்துணந்தவர். பணிவுடையவர். தான் சிவபெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும்பொருளெல்லாம் சிவனடியார்குரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பறிந்து கொடுப்பவர்.
கஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். பிறப்பு ஒளிக்கப் பிறந்த அப்பெண் கொடி பேரழகுடன் வளர்ந்து திருமணப்பருவம் எய்தினார்.

55. மங்கையர்க்கரசியார் நாயனார்

“வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.

மங்கையற்கரசியார் சோழமன்னனின் தவக்கொழுந்தாய் அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.
பாண்டிய மன்னன் தாம் செய்த தீவினைப் பயனாய் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் ஓரமைச்சர் தவிர மற்றையயோரெல்லாம் சமண சயத்தவராகவே இருந்தனர். இவ்வண்ணம் சமண இருள் சூழ்ந்து சைவம் குன்றியிருந்தமை குறித்து மங்கையர்க்கரசியார் மனம் நொந்தார். அவர் பாண்டி நாடெங்கும் சைவ வாய்மை விளங்க வேண்டுமென்ற கருத்தினராய் இருந்தார்.
இவ்வாறிருக்கும் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார், பாண்டி நாட்டுக்கு அணித்தாகத் திருமறைக்காட்டில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். இந்நற்செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் மனக்கருத்து நிறைவுள்ளது எனக் களிப்புற்றார். சம்பந்தப்பிளையார் தொலைவில் இருந்தாலும் அவர் தம் திருவடியைக் கும்பிட்டதோர் மகிழ்ச்சி கொண்டார்.

54. பெருமிழலைக் குறும்ப நாயனார்

பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை

சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாட்டிற் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலைக்குறும்பனார் ஆவர். இவர் சிவனடியார்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனதால் நினைக்குங் கடப்பாட்டினால் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று அன்பினால் மேற்கொண்டார். நம்யாரூரர் திருபெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய அட்டமா (எட்டுவிதமான்) சித்திகளும் கைவரப்பெற்றார்.
இத்தகைய நியமங்களையுடையாராய்ப் பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற் சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார். “திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்” என்று எண்ணி ‘இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்’ என்று சொல்லி. நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு, பிரமநாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக முயற்சிகளினாலே பிரமரந்திரம் திறப்ப, உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார்.

53. பூசலார் நாயனார்

தொண்டை நாட்டில் திருநின்றவூரிலே மறையவர் குலத்திலே தோன்றியவர் பூசலார் என்னும் பெருந்தகையார். இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பிய இவர் தம்மிடத்துப் பொருள் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடியும் பெற இயலாதவராயினர். இந்நிலையில் மனத்திலே சிவபெருமானுத் திருக்கோயில் அமைக்க எண்ணினார். மனத்தின்கண் சிறிதுசிறிதாகப் பெரும்பொருள் சேர்த்தார். திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார். நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டனர். சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம் வகுத்தமைத்து இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள்ளே சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார்.
இவரது திருப்பணி இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், காடவர்கோனாகிய வேந்தர்பெருமான் காஞ்சி நகரத்திலே இறைவனுக்குத் திருக்கற்றளி அமைத்துத் தன் பெரிய பொருள் முழுவதையும் அத்திருக்கோயிற் பூசனைக்கென்று வகுத்துத் தான் அமைத்த கற்றளியிலே சிவபெருமானை எழுந்தருளுவிப்பதற்குப் பூசலார் அகத்தில் வகுத்த அந்த நாளையே குறித்தார். பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அந்நாளின் முதல் நள்ளிரவில் காடவர் கோமான் முன் கனவில் எழுந்தருளி நின்றவூர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுவோம்; நீ இங்கு செய்யத்துணிந்த தாபனத்தினை நாளைய தினத்தில் வைத்துக் கொள்ளாது பின்னர் மற்றொரு நாளில் செய்வாயாக’ என்று பணித்தருளி மறைந்தருளினார்.

52. புகழ்த்துணை நாயனார்

புடைசூழ்ந்த புலியதண் மேல் அரவாட வாடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.

புகழ்த்துணையார் சோழ நாட்டிலுள்ள செருவிலிபுத்தூரிலே சிவவேதியர் குலத்தில் தோன்றினார். சிவனது அகத்தடிமைத் தொண்டிற் சிறந்த அவர் சிவபெருமானைத் தத்துவ நெறியியில் சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். அக்காலத்தில் பஞ்சம் வந்தது. அவர் பசியில் வாடினார். அப்போதும் இறைவரை விடுவேனல்லேன் என்று இரவும் பகலும் விடாது பூவும் நீரும் கொண்டு பூசித்து வந்தார். ஒருநாள் பசியால் வாடி இறைவரைத் திருமஞ்சனமாட்டும் பொழுது திருமஞ்சனக்குடத்தைத் தாங்கமாட்டாமையினால் கைதவறிக் குடத்தினை இறைவர் திருமுடிமேல் விழுத்திவிட்டு நடுங்கி வீழ்ந்தார். அப்போது இறைவரது திருவருளால் துயில் வந்தது. இறைவர் அவரது கனவில் தோன்றி ‘உணவுப்பொருள் மங்கிய காலம் முழுவதும், ஒரு காசு நாம் தருவோம்’ என்று அருளினார். புகழ்த்துணையார் துயிலுணர்ந்து எழுந்து பீடத்தின் கீழ்ப் பொற்காசு கண்டு கைக்கொண்டு களித்தனர். அவ்வாறு பஞ்சம் நீங்கும்வரை இறைவர் நாடோறும் அளித்த காசு கொண்டு துன்பம் நீங்கி, இறைவரது வழிபாடு செய்து வாழ்ந்திருந்து பின் சிவனடி சேர்ந்தனர்.

51. புகழ்ச்சோழ நாயனார்

பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்” – திருத்தொண்டத் தொகை

சோழநாட்டு உறையூர்த் தலைநகரில் இருந்த அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர், அவர் தமது தோள்வலிமையினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தமது பணிகேட்டுத் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர். சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார். இவ்வாறு உறையூரில் இருந்து செங்கோல் செலுத்திய புகழ்ச்சோழர் கொங்கரும், குடபுலமன்னவர்களும் ஆகிய சிற்றரசர்களிடம் திறைபெறற் பொருட்டுத் தமது மரபின் தலைநகராகிய கருவூரை அடைந்தார். கருவூர் ஆனிலைக் கோயிலில் வழிபட்டு அத்தாணி மண்டபத்தில் அரச கொலு வீற்றிருந்து அம்மன்னர்கள் கொணர்ந்த திறை கண்டிருந்தனர். திறை கொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச் செயலுரிமைத் தொழில் அருளினர். அவ்வாறு திறை கொணரா மன்னர் உளராகில் தெரிந்துரைப்பீர் என்று அமைச்சருக்குக் கட்டளை இட்டார்.
இவ்வாறு கருவூரில் தங்கிய நாட்களில், சிவகாமி ஆண்டார் என்னும் அடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூவைப் பறித்துச் சிந்தியதனால் பட்டத்து யானையினையும், பாகரையும் எறிந்து கொன்ற எறிபத்தரிடம் யானையால் நேர்ந்த சிவ அபராதத்திற்குத் தீர்வாகத் தம்மையே கொல்லவேண்டும் என்று தம் உடைவாளினை நீட்டித்த் திருத்தொண்டில் தலை நின்றவர்.

50. நேச நாயனார்

“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.

நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.

49. நின்றசீர் நெடுமாற நாயனார்

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

நெடுமாறனார் பாண்டுநாட்டு மன்னாராய்ப் பாராண்டு வந்தார். அந்நாளில் வடநாட்டு மன்னர் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால் நெல்வேலிவென்ற நெடுமாறன் எனப் பெயர் பெற்றார். நெடுமாறனார் சோழமன்னன் மகளான மங்கையற்கரசியாரைத் திருமணம் செய்தார்.
மாறனார் தீவினைப் பயனாய் சமண சமயத்தைச் சார்ந்து தீப்பிணியுற்றார். திருஞானசம்பந்தர் என்னும் நாமமந்திரத்தைச் செவிப்புலத்துற்றபோதே மாறனாரது தீப்பிணி சிறிது குறைவுற்றது. சம்பந்தப் பிள்ளையார் வந்தபொழுது தன்னையும் அறியாமல் தன் தலைப்பக்கமாக இருந்த பொற்றவிசில் அவரை அமருமாறு கையெடுத்துக் காட்டினார். அப்பொழுது ஆரவாரித்த சமணரை அடங்குமாறு சொல்லி தம் சுரநோயைத் தீர்ப்பதுவே இருசாராருக்மாகியவாது என உரைத்தார். சம்பந்தப்பிளையார் திருப்பதிகம் பாடி திருநீறு தடவியபோது அவர்தம் வலப்பக்கம் அமுத இனிமையும் சுவர்க்க இன்பமும் போல சுகம் செய்தது. மற்றைய பாகம் நரகத் துன்பமும் கொடுவிடமும் போல வருத்தியது. சமணரை “வாதில் தோற்றீர்” எனக் கூறிச் சம்பந்தப் பிள்ளையாரை மனதார வணங்கி வருத்தம் முற்றூம் தீரும்படி வேண்டினார். முற்றும் தீர்ந்ததும் முடிமிசைக் கைகுவித்த கையராய் “ஞானசம்பந்தர் பாதம் அடைந்து உய்ந்தேன்” எனப் போற்றினார். சமணரை “என்னவாது உமக்கு” என ஏளனஞ்செய்தார். ஏளக்குறிப்பறியாத சமணர் அதனை ஒரு வினாவெனக் கொண்டு அனல் வாதத்திற்கும் எழுந்தனர்.

48. நரசிங்கமுனையரைய நாயனார்

மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.

தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின் திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பண்ந்தார். சிவன்கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.
திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டு அருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர்.
நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம் இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல் உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்) கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.

47. நமிநந்தியடிகள் நாயனார்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை

சோழ நாட்டு ஏமப் பேறூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தியடிகள். அவர் இரவும் பகலும் பிரியாது சிவபெருமானைப் பூசித்து மகிழும் ஒழுக்கமுடையவர். நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை போற்றி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். வழிபட்ட மகிழ்ச்சியில் எழுந்த அன்பினாலே கோயில் தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருள்ளத்தெழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தம்மூருகுச் சென்று எண்ணை கொணர எண்ணாது, திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினார். அவர் சென்ற வீடு சமணர் வீடு. அங்குள்ள சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை.

46. திருமூல நாயனார்

நம்பியிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டாம சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார்.

45. திருநீலநக்க நாயனார்

திருநீலநக்க நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.
“ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்” – திருத்தொண்டத் தொகை
வரலாறு
திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்வித்தல் முதலாக எவ்வகைப்பட்ட திருப்பணிகளையும் செய்து வந்தார்.
இவ்வாறு ஒழுகும் திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை அருச்சிக்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன்வரத் கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்து இறைவர் திருமுன் இருந்து திருவைந்தெழுத்தினைச் ஓதினார். அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார்.

44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

திருவெருக்கத்தம்புலியூரில் யாழின் மூலமாக இன்னிசை வளர்க்கும் பெரும்பாணர் குலத்தில் பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். இவர் சிவபெருமானுடைய திருப்புகழை யாழ்மூலம் இசைக்க, ஏழிசையிலும் வல்லவரான தம் மனைவியார் மதங்கசூளாமணியாருடன் சோழ நாட்டிலுள்ள திருத்தலங்களை வணங்கி பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்தார். அங்கு திருவாலவாய்த் திருக்கோயிலின் வாயிலை அடைந்து முன்நின்று இறைவனது புகழ்சேர் புகழ்மாலைகளை யாழிலிட்டு இசைத்துப்போற்றினார். அவ்வின்னிசையைக் கேட்டு மகிழ்ந்த ஆலவாய் இறைவர், அன்றிரவு தம் தொண்டர்க்கெல்லாம் கனவில் தோன்றித் திருநீலகண்டப் பெரும்பாணரை தமது திருமுன் கொண்டு புகும்படி பணித்தருளினார். அவ்வாறே பாணனார்க்கும் உணர்த்தியருளினார். இறைவரது விருப்பப்படி பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் புகுந்திருந்து அவரது மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். தரையினிற் சீதம் தாக்கில் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும் என்று பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் அசரீரி வாக்கினால் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப் போற்றினார்.
ஆலாவாயிறைவரைப் போற்றி அருள் பெற்ற பெரும்பாணர் பல தலங்களையும் வழிபட்டுத் திருவாரூரரை அடைந்தார். அங்கு தமது குல மரபின் படி கோயில் வாயிலின் முன் நின்று இறைவர் புகழ்த்திறங்களை யாழில் இட்டு இசைத்தார். பாணரது இன்னிசைக்கு உவந்து ஆரூர் அண்ணலார், பாணர் உட்சென்று வழிபட, வடதிசையில் வேறொரு வாயிலை வகுத்தருளினார். பாணர் அவ்வழுயே புகுந்து ஆரூர்த்திருமூலட்டானத்து அமர்ந்த இறைவர் முன் சென்று ஆளுடைய பிள்ளையாரை வணங்கும் விருப்பினராய்க் காழிப்பதியை அடைந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் உறையும் திருத்தலங்களை வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வந்த யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூட அடியார் திருக்கூட்டத்துடன் ஈறில் பெருஞ்சோதியினுட் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்றார்.

43. திருநீலகண்ட நாயனார்

திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவரைப் பற்றிய குறிப்பு, 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி.
“திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை
“சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால்
ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே” – திருத்தொண்டர் திருவந்தாதி
சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் இருந்தார். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத சீர்மைகளுள் திருநீலகண்டத்தைப் பெரிதும் நயந்தார். அன்பாளர்கள் அமுது செய்தற் பொருட்டு பெருமான் நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீல கண்டம்! ஆதலால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார்.

42. திருநாளைப் போவார் நாயனார்

“செம்மையே திருநாளைப் போவார்க்கு அடியேன்” – திருத்தொண்டத் தொகை
வரலாறு
தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. அப்புலைப்பாடியில் வாழ்ந்த தேவர்களின் தலைவராக ‘நந்தனார்’ என்றோர் நல்லவர் இருந்தார். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். அவர் தமது குலப்பிறப்பிற்கேற்ற கொள்கையால் ‘புறத்தொண்டு’ புரிந்து வந்தவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார். அருச்சனைக்காக கோரோசனை கொடுப்பார். பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும் செய்வார்.
ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார். விருப்பம் போன்று சென்று வாயிலினின்று இசைபாடி நின்றார். அப்பொழுது பெருமானை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின் ஆசை தீர்த்தற்குப் பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்தார். நேர்த்தரிசனம் பெற்றுப் பரவசத்தரான நந்தனார் பணிந்தெழுந்து வீதிவலம் வரும்போது பள்ளமான ஓரிடத்தைக் கண்டார். அவ்விடம் குளம் தோண்டுவதற்கு அமைவாயிருப்பது கண்டு குளம் அமைத்தார். பின் கோயிலை வலம் வந்து நடமாடி விடைபெற்று தம்மூர் சேர்ந்தார். இவ்வாறு அயலூர்களிலேயுள்ள திருகோயில்கள் பலவற்றிற்கும் சென்று திருத்தொண்டு புரிந்துவந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது.

41. திருநாவுக்கரசு நாயனார்

திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் மருணீக்கியார். மருணீக்கியார் தற்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவக் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு சமண சமயத்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச் சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்த போது திருநாவுக்கரசர் தர்மசேனா என்றழைக்கப்பட்டார்
இவரது தமக்கையார் திலகவதியார். சிறந்த சிவபக்தராக இருந்தார். தம்பியார் சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். அக்காலத்தில் மருணீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டதாம். சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது போகவே திலகவதியாரின் ஆலோசனைப்படி சிவனிடம் “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்ததாம். இதனால் மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
இவர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் பதிகங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டு தூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் அழைக்கப்பட்டார். சமணத்தைச் சார்ந்திருந்த பல்லவப் பேரரசனான மகேந்திர பல்லவனைச் சைவனாக்கினார்.
தனது முதிர்ந்த வயதில் சிறுவனாயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் சம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சரியைத் தொண்டு புரிந்த சுந்தமூர்த்தி சுவாமிகள் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் சாலோக முக்தியடைந்தார்.
அவர் பாடிய தலங்களில் முக்கியமானதலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இஙகு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்ற்ப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.
அற்புதங்கள்
  • சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்
  • சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்
  • சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது
  • சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
  • சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
  • வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
  • விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது
  • காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.

40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார்.
இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இக் கோயிலை அவர் கரக்கோயில் எனப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் மேலக்கடம்பூர் மட்டுமே.
அற்புதங்கள்
  • மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை
  • சிவபெருமானிடத்தே பொற்றாளமும் ,முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும் ,முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.
  • சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கம் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது)வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார், ஆற்றில் கால் வைக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன, எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார், சிவபெருமான் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார், இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது.வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம், வைகை ஆற்றின் குறுக்கே ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் புதையுண்டு கிடக்கின்றன, அவற்றை இன்றும் மக்கள் கண்டெடுக்கின்றனர்.
  • அபாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது
  • பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
  • விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.

Saturday, June 11, 2011

39. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்


“திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில் ஏகாலியர் மரபில் தோன்றியவர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவர். இவரைப்பற்றிய தகவல் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் 25-வது புராணமாக ‘மும்மையால் உலகாண்ட சருக்கம்’ என்ற பகுதியில் உள்ளது.
பெயர்க்காரணம்
சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பை யுணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு ‘திருக்குறிப்புத் தொண்டர்’ என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார்.
அடியார் துணி துவைத்தற்பணி
இவர் செவ்விய அன்புடையவர்; நல் ஒழுக்க நெறி நிற்பவர்; சிவனடித்தொண்டு புரிபவர்; மன, மொழி, மெய்யடியாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பழுக்கும் போக்குவார் ஆயினர்.

38. தண்டியடிகள் நாயனார்


“நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை
தண்டியடிகள் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார்.
ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் எங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிக் குளத்தின் இடம் வரவரக் குறைவடைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தை முன்போற் பெருகத்தோண்ட எண்ணினார். குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிக் கரையிலே போடுவாராயினார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரை அடைந்து ‘மண்ணைத்தோண்டினால் சிற்றுயிர்கள் இறந்துவிடும், வருத்தல் வேண்டாம்’ என்றனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘திருவில்லாதவர்களே, இந்தச் சிவதொண்டின் பெருமை உங்களுக்குத் தெரியவருமோ’ என்றனர். அமணர்கள் அவரை நோக்கி, ‘சிந்தித்து இந்த அறத்தினைக் கேளாத நீ செவியும் இழந்தனையோ’ என்று இகழ்ந்துரைத்தனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘மந்த உணர்வும், விழிக்குருடும், கேளாச்செவியும் உமக்கே உள்ளன. நான் சிவனுடைய திருவடிகளை அல்லலால் வேறு காணேன்; அதனை அறிவதற்கு நீர் யார்? உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீர் என்ன செய்வீர்? என்றார். அதுகேட்ட சமணர், ‘நீ உன் தெய்வத்தருளால் கண்பெற்றாயாகில் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம்’ என்று சொல்லி அவர் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்டதறிகளையும் பிடுங்கி எறிந்தனர்.

37. சோமாசிமாற நாயனார்


“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
சோமாசிமாற நாயனார் சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே தோன்றினார். சிவபக்தி உடையவராய்ச் சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் இயல்புடையவராயிருந்தார். உமையொரு பாகனாகிய சிவபெருமானையே முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தார்.
ஈசனுக்கு அன்பர் என்போர் எக்குலத்தவராயினும் அவர்கள் தன்னை ஆளாகவுடையார்கள் என்று உறுதியாகத் தெளிந்திருந்தார்கள்.
சிவன் அஞ்செழுத்தும் சித்தந் தெளிய ஓதும் நித்த நியமம் உடைய இந்நாயனார் சீரும், திருவும் பொலியும் திருவாரூரினை அடைந்து தம்பிரான் தோழராகிய வன்றொண்டர்க்கு அன்பினால் நெருங்கிய நண்பரானார்; திருவாரூரில் ஐம்புலச் சேட்டைகளையும், காமம் முதலிய அறுவகைக் குற்றங்களையும் நீக்கிய இவர் அத்திருவாரூரில் தங்கி ஆரூரர் தம் திருவடிகளைப் பணிந்து போற்றிய சிறப்பினால் என்றும் நின்று நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்.

36. செருத்துணை நாயனார்

சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்த் தொன்றியவர் செருத்துணையார். சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் கழற்சிங்கரது பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவிகொண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி நீழலில் செர்ந்து இன்பமுற்றார்.

35. சுந்தரமூர்த்தி நாயனார்


திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிபர் திடீரென மறைந்தாராம். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

34. சிறுத்தொண்ட நாயனார்


“செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை.
காவிரி வழநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர்; யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால் சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்துவர்; ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர். இவர், மன்னுக்குச் சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை, குதிரை, முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தையும், ஆண்மையினையும் அதிசயித்து புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை என்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற வேந்தன், “உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன், என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம்பெருமான்; எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என இறைஞ்சினார்.

33. சிறப்புலி நாயனார்


“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை
பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார். சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இவர் திருவைந்தெழுத்தொதிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

32. சாக்கிய நாயனார்


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் – திருத்தொண்டத் தொகை
சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். எவ்வுயிர்க்கும் அருளுடையாராய்ப் பிறவாநிலை பெற விரும்பிக் காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலியன புறச்சமயச் சார்புகள் அல்ல என்றும், ஈறில் சிவநன்நெறியே பொருளாவதென்றும் துணியும் நல்லுணர்வு கைவரப்பெற்றார். “செய்யப்படும் வினையும், அவ்வினையைச் செய்கின்ற உயிரும், அவ்வினையின் பயனும், அப்பயனைச் செய்த உயிர்க்கே சேர்ப்பிக்கும் இறைவனும் எனச் சைவசமயத்தில் கூறப்பட்ட பொருள் நான்காகும். இப்பொருட்பாகுபாடு சிவநெறியல்லாத பிறசமயத்தில் இல்லை” எனத்தெளிந்து கொண்டார். உயிர்களை உய்விக்கும் மெய்ப்பொருள் சிவமே, எந்த நிலையில் நின்றாலும் எக்கோலங்கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப்பொருளாகும்” என்று ஆராய்ந்து துணிந்து தாம் கொண்ட புத்தசமய வேடத்துடனேயே சிவபெருமானை மறவாது போற்றுவராயினர்.

31. சத்தி நாயனார்

 “கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை


சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார். சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர்.

30. சண்டேஸ்வர நாயனார்


சோழவளநாட்டில் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்ற என்னும் ஊர் ஒன்று உளது. இது முருகன் வழிபட்டதலமாகும். இவ்வூரில் அந்தணர் மரபில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளில் வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.
ஒருநாள் வேதமோதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப்புடைத்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதைபதைத்த விசாரசருமர் இடையனைத்தடுத்து ஐயா! பசுக்கள் தம்முடலுறுப்புக்களில் தேவர்களையும், முனிவர்க்ளையும் புண்ணியதீர்த்தங்களையும் உடையாயுள்ளன. ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று இடையனிற்கு எடுத்துத்துரைத்து அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.

29. சடைய நாயனார்


“என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் ‘சடையனார். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெஞ்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.

28. கோட்புலி நாயனார்


“அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை
கோட்புலிநாயனார் சோழநாட்டிலே திருநாட்டியத்தான்குடியில் வேளாளர் மரபில் தோன்றினார். இந்நாயனார் நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டு, அவர் இசைந்துவர எதிர்கொண்டு அழைத்துத் தம் மாளிகையிற் சிறப்போடு பூசனையாற்றித் தம் மகளிர் இருவரையும் அடிமைகொள்ளுமாறு அர்பணித்தார். அவர் தம் அர்பணம் நம்பியாரூரரை அம்மகளரின் ‘அப்பானா’க முறைமை கொண்டு சிங்கடியப்பன், வனப்பகைஅப்பன் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுமளவிற்கு நம்பியாரூரரை இரங்கச்செய்தது.

Thursday, June 9, 2011

27. கோச் செங்கட் சோழ நாயனார்


சோழநாட்டிலே காவிரிச் சந்திர தீர்த்தத்தின் அருகிற் பெருமரங்கள் நிறைந்த நீண்ட குளிர்ந்த சோலையொன்றுள்ளது. அச்சோலையிலுள்ள ஒரு வெண்ணாவல் மரத்தடியில் வெளியுருப்பட்ட சிவலிங்கத் திருமேனியைக் கண்டு பெருந்தவத்தையுடைய வெள்ளை யானை தன் துதிக்கையினால் நன்னீரை முகந்து நாள்தோறும் திருமஞ்சனஞ் செய்து மலர்தூவி வழிபாடு செய்தது. அதனால் அவ்விடத்திற்குத் திரு ஆனைக்கா என்னும் பெயருண்டாயிற்று. அங்கே மெய்யுணர்விற் சிறந்த சிலந்தி ஒன்று இறைவன் திருவடிமேல் சருகு முதலியன் உதிராவண்ணம் தன் வாயின்நூலினால் மேற்கட்டிபோன்ற அழகிய பந்தல் அமைத்தது.
யானை வழிபடச் சென்றபோது சிலந்தி வாய்நீர் நூலினால் அமைத்த அப்பந்தரினைத் தூய்மையற்றதுச் சிதைத்தது. அதுகண்ட சிலந்தி யானையின் கைசுழன்றமையாற் பந்தர் சிதைந்ததென்றெண்ணி மீளவும் தன் வாய் நூலால் அழகிய பந்தர் செய்தது. அதனை மறுநாளும் யானை அழித்துப் போக்கியது. அதுகண்ட சிலந்தி ‘இறைவர் திருமுடிமேற் சருகுமுதலியன விழாதபடி நான்வருந்தியிழைத்த நூற்பந்தரை இவ்வாறு அழிப்பதோ? என வெகுண்டு யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்தது. அவ் வருத்தம் பொறாத யானை தன் துதிக்கையினை நிலத்தில் மோதி அறைந்து வீழ்ந்திறந்தது. அதன் துதிக்கையினுள்ளே புகுந்த கடித்த சிலந்தியும் உயிர் துறந்தது. ஆனைக்கா இறைவர் அருள் புரியும் நெறியால் அவ்வெள்ளையானைக்கு வீடுபேறடைய அருளினார்.

26. கூற்றுவ நாயனார்


களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.
மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணி முடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.
அது கண்ட கூற்றனார் மனம் தளர்ந்து “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி, அந்நினைவுடன் துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர் கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சி புரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர்.

25. குலச்சிறை நாயனார்


“பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை
புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். இவர் நம்பியாரூரரால் பெருநம்பி எனப் போற்றப்பட்ட பெருந்தகையாளர். திருத்தொண்டிற் சிறந்த இத்தொண்டர் சிவனடியார்களை முத்திகாரணர் எனத் துணிந்தவர். ஆதலால் சிவனடியார்களிடத்து மிகுந்த வாரப்பாடு உடையவராயிருந்தார். சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார். நல்லவர் தீயவரென நாடாது பணிந்து வணங்குவார். ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு வரவேற்று இன்னமுது ஊட்டுவார். திருநீறும், உருத்திராக்கமும் அணிந்தவரும் அஞ்செழுத்தோதுபவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை.
இத்தகைய அடியவர்க்கு அன்பு பூண்ட அகத்தினரான குலச்சிறையார் நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சராக அரசகருமம் செய்தார். பாண்டியமன்னன் சமண சமயத்தவனாகவும் குடிகளெல்லாம் அவன் வழியினராகவும் நின்ற போதும் பெருமானம் உடையவராக அவர் சைவத்தின் வழி நின்றார்.

24. காரைக்கால் அம்மையார்


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `பேயார்` எனக் குறிக்கப்படுபவர் இவ்வம்மையார். இவர் தாம் அருளிச் செய்த பிரபந்தங்களாகிய மூத்த திருப்பதிகங்களின் திருக் கடைக் காப்புக்களிலும் அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளி லும் `காரைக்கால் பேய்` என உரைப்பதால் இவர் தம் ஊர் காரைக்கால் என்பதும் பேய் வடிவம் வேண்டிப் பெற்றபின் பாடியன ஆதலால் தன்னைப் பேய் எனக் குறித்துரைத்துள்ளார் என்பதும் அறியற் பாலனவாகும்.
திருமணம்
நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகன் தன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பி முதியோர் சிலரைத் தனதத்தன்பால் அனுப்பினான். இருமுது குரவர் இசைவினால் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. தனதத்தன் தனக்கு வேறு பிள்ளைப்பேறு இல்லாமையால் காரைக்காலிலேயே தன் மருகன் பொன் வாணிபம் புரியவும் தனியே மனையறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தான்.
மனைத்தக்க மாண்பு
பரமதத்தன் தன் மாமனார் அமைத்துத் தந்த வாணிபத்தைப் பன்மடங்காகப் பெருக்கிச் சிறப்புற வாழ்ந்து வந்தான். புனிதவதியார் மனைத்தக்க மாண்புடன் இல்லறம் இயற்றியதோடு சிவபெருமான் மீது கொண்ட பக்தியிலும் மேம்பட்டுச் சிவனடியார்களுக்குத் திரு அமுதளித்தல், வேண்டும் பொருள்களை அவ்வப்போது கொடுத்தல் முதலான சிவபுண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.

23. குங்கிலியக்கலய நாயனார்


“கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை
காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உண்டு. அது இறைவன் வீரஞ் செய்த எட்டுத் தலங்களில் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர்பெறும். காலனை உதைத்த வீரம் இங்கு நிகழ்ந்துள்ளது. இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.

22. காரி நாயனார்


“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார். அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.
அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார்.

21. கழற்சிங்க நாயனார்


“கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத்தொகை.
கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு ‘அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?’ என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், ‘இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்’ என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, ‘பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

20. கழறிற்றறிவார் நாயனார்


“கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
சோழ நாட்டிலே சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர், மண் மேற் சைவநெறி வாழ வளர்ந்து, முன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினாற் கண்ணுதற் பெருமானாகிய சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்துடையராயினார் தமக்குரிய அரசியற் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களமென்னுந் திருக்கோயிலையடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துறைதலை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல எனவுணர்ந்த அப்பெருந்தகையார், நாடோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுகுமிட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து இறைவனுக்கு நீராட்டி, முன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டையாட்சி புரிந்த செங்கொற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதிவினைத் துறந்து தவஞ்செய்தற் பொருட்டுக் கானகஞ் சென்றான்.

Translate