Search This Blog

Tuesday, February 8, 2011

14. ஐயடிகள் காடவர்கோன் நாயனர்


                 காடர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

                மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம். இவ்வாறு பல்லாண்டு காலம் கோயில் திருப்பணிகள் புரிந்தும் ஈசனை போற்றி இசைபாடியும் சிவலோகம் சேர்ந்தார்.

13. ஏனாதி நாத நாயனார்

              ஏனாதி நாத நாயனார் சோழநாட்டிலே எயினூரிலே சான்றார் குலத்தில் தோன்றியவர். தொன்மை திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டில் நிலைத்து நின்ற இவர் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் கடமையாற்றி வந்தார். அதன் மூலம் வரும் பொருள் வளங்களால் சிவனடியார்களை உபசரிக்கும் பேரன்பினராய் விளங்கினார்.
ஏனாதிநாதர் வாட்படை பயிற்றும் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்தில் போர்பயிற்சி பெறவிரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றனர். இதனால் அவரது தாய்முறையிலான அதிசூரன் என்பானுக்கு அத்தொழில் வருவாய் குறைந்தது. அதனால் ஏனாதிநாதர் மீது பொறாமையுற்ற அதிசூரன் வீரர் கூட்டத்தோடு சென்று ‘வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது’ என அவரை போருக்கு அறைகூவியழைத்தான்; ஏனாதியார் போர்க்கோலம் பூண்டு சிங்க ஏறுபோல் புறப்பட்டார். அவரிடம் வாள் வித்தை பயிலும் காளையரும் வாள்வீரரான அவரது சுற்றத்தலைவரும் அவரின் இரு பக்கமும் சூழ்ந்து சென்றனர். ‘நாம் இருவரும் சேனைகளை அணிவகுத்துப் போர் செய்வோம். போரில் வென்றார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கைக்கொள்ள வேண்டும்’. என்று அங்கு அதிசூரன் கூறினான். ஏனாதிநாதரும் அதற்கு இசைந்தார். இருவரிடையேயும் நடந்த வாட் போரில் அதிசூரன் தோற்றோடினான்.

             தோற்றோடிய அதிசூரன் மானமழிந்ததற்கு நொந்து, இரவு முழுவதும் நித்திரையின்றி ஆலோசித்தான். இறுதியில் ஏனாதி நாதரை வஞ்சனையாற் கொல்ல எண்ணினான்.

12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்


            சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்னும் பதியில் வேளாண்மையிற் சிறந்த ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காமநாயனார். இவர் சிவபத்தியிலும் அடியார் பக்த்தியிலும் சிறந்து விளங்கினார். கலிக்காமனார் மானக்கஞ்சாறனாரது மகளைத் திருமணம் செய்தவர். ஏயர்கோன் கலிக்காமர் திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருபணிகள் புரிந்தார். “நிதியமாவன திருநீறுகந்தார் கழல்” என்று சிவபெருமானைத் துதியினாற் பரவித்தொழுது இன்புறுந்தன்மையராய் வாழ்ந்தார். அங்கனம் வாழும் நாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை பரவையாரிடத்து தூதுவிட்ட செய்தியைக் கேள்யுற்று, ஆண்டவனை ஏவுபவனும் தொண்டனா? இது என்ன பாவம்! இப்பெரும்பிழையினைக் கேட்டபின்னரும் இறவாதிருக்கின்றானே! பெண்ணாசை காரணமாக ஒருவன் ஏவினால் அவ்வேவலைச் செய்வதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவது போவதாகத் திரிவதோ? நான்முகன் மால் ஆதிய தேவரெல்லாம் தொழும் தேவாதேவன் தூதுசெல்ல இசைந்தாலும் அவ்வாறு ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்தவனைக் காண்பேனாயின் என்ன நிகழுமோ? என்று பலவாறு எண்ணி மனம் புழுங்கினார். இதனைக் கேள்வியுற்று தன்பிழையினை உணர்ந்த வன்றொண்டர் ஆரூரிறைவரை நாளும் போற்றிக் கலிக்காமரது கோபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொண்டார். சிவபெருமான் அவ்விருவரையும் நண்பராக்கத் திருவுளம் கொண்டார். ஏயர்கோன் கலிக்காமனார்க்குச் சூலை நோயினை ஏவினார். அச்சூலை ஏயர்கோனை வருத்திற்று, வருத்தம் தாங்காது சிவபெருமான் திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார். அப்போது சிவபெருமான் அவர் முன் எழுந்தருளி “உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் தீர்த்தாலன்றித் தீராது” எனக் கூறினார். அதுகேட்ட கலிக்காமர் வழிவழி அடியனான என் வருதத்தை வம்பனான அவ்வன்றொண்டனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்கத் தீர்வதைக் காட்டிலும் எந்நோய் என்னை வருத்துதலே நன்று’ என்றார். சிவபெருமான் வன்றொண்டர் முன் தோன்றி ‘இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற் சூலை சென்று நீ தீர்ப்பாய்’ எனப் பணித்தருளினார். நம்பியாரூரும் பணிந்து விரைந்து தாம் சூலைநோய் மாற்ற வருஞ் செய்தியை ஏயர்கோனார்க்குச் சொல்லியனுப்பினார். அதனைக்கேட்ட கலிக்காமர் ‘மற்றவன் வந்து நீக்குதன் முன்னமே என்னை நீங்காப் பாதகச் சூலை தன் உற்ற் இவ்வயிற்றினோடும் கிழிப்பேன் என்று உடைவாளாற் கிழித்திட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது.

           கலிக்காமர் இறத்தல் கண்டு மனைவியார் உடனுயிர் விடத்துணிந்தார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அண்மையில் வந்துவிட்டார் என்று வந்தோர் சொல்லக்கேட்டார். தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ளும்படி சுற்றத்தார்களை ஏவினார். அவர்களும் நம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர்களது வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் ‘கலிக்காமருடைய சூலைநோயை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக முயல்கின்றேன்’ என்றார். அப்பொழுது கலிக்காமரது மனைவியார் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வணங்கி நின்று ‘சுவாமி! அவருக்குத் தீங்கேதுமில்லை உள்ளே பள்ளிகொள்கின்றார்’ என்றனர். அதுகேட்ட வன்றொண்டர், தீங்கேதுமில்லை என்றீர்கள், ஆயினும் என்மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் அவரை நான் விரைந்து காணுதல் வேண்டும்’ என்றார். அதுகேட்டு அவர்கள் கலிக்காமரைக் காட்டினர். கலிக்காமர் குடர் சொரிந்து உயிர் மாண்டு கிடத்தலைக் கண்ட சுந்தரர் ‘நிகழ்ந்தது நன்று; யானும் இவர் போல் இறந்தழிவேன்’ என்று குற்றுடைவாளைப் பற்றினார்.

11. எறிபத்த நாயனார்`


           எறிபத்த நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார். அவர் அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார். இவர் சிவனடியார்களுக்கு ஒரு இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர்; அடியார்களுக்கு இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்களுக்குத் தீங்கு புரிந்தோரைப் பரசு என்னும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதன் பொருட்டு அவர் கையிலே எப்பொழுதும் மழுப்படை இருக்கும்.

           அந்நகரிலே திருவானிலைத் திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவர்க்குப் பள்ளித்தாமப் பணி செய்துவந்த சிவமாமியாண்டர் என்னும் ஒரு முதிய அடியவர் ஒருவரும் இருந்தார். அவர் ஒருநாள் வைகறையில் துயிலெழுந்து நீராடித் தூய்மை உடையவராய் வாயைத் துணியாற் கட்டித் திருநந்தவனஞ் சென்றார். அங்கு மலர் கொய்து பூக்கூடையில் நிறைத்து பூக்கூடையைத் தண்டில் மேல் வைத்து உயரத் தாங்கிக் கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து வந்தார். அன்று மகாநவமியின் முதல் நாள். அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்சோழரது பட்டத்து யானை, ஆற்றில் நீராடி, அலங்கரிக்கப் பெற்று மதச் செருக்குடன் பாகர்க்கு அடங்காது விரைந்து வந்தது. அது சிவகாமியாண்டரைப் பிந்தொடர்ந்து ஓடி அவர் தம் கையிலுள்ள பூக்கூடையைப் பறித்துச் சிதறியது. யானை மேல் உள்ள பாகர்கள் யானையை விரைந்து செலுத்திச் சென்றனர். சிவகாமியாண்டவராகிய அடியவர், இறைவர்க்கு சாத்தும் திருப்பள்ளித் தாமத்தைச் சிதறிய யானையின் செயல் கண்டு வெகுண்டு அதனைத் தண்டு கொண்டு அடிப்பதற்கு விரைந்து ஓடினார். ஆனால் முதுமை காரணமாக இடறிவிழுந்து நிலத்திலே கைகளை மோதி அழுதார்.

10. உருத்திர பசுபதி நாயனார்

          பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளளயும் தலைமேற் குவித்துக் கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியடைவராய் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார்

9. இளையான்குடி மாறநாயனார்


             இளையான்குடி என்னும் ஊரிலே மாறனார் என்னும் பெயருடைய பெரியாரொருவர் இருந்தார். அவர் உழவுத்தொழில் வந்த பெருஞ் செல்வமும், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் உடையவராய்த் திகழ்ந்தார். சிவனடியார் யாவரெனினும் தம் இல்லத்திற்கு வந்தால் எதிரே சென்று கைகூப்பி வணங்கி, இனிய மொழிகளைக் கூறிவரவேற்று அழைத்து வருவார். கரக நீர் கொண்டு அவர்கள் பாதங்கள் விளக்கி அத்தீர்த்ததைத் தன் தலையில் தெளிப்பதுடன் உள்ளும் பருகுவார். மெல்லிய துணியால் பாதங்களை ஒற்றி ஆசனத்தில் அமரச் செய்து பூசனை செய்யவார். பின்பு கைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுசுவையை உடையனவாய் உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது எனும் நால்வகை உணவுகளை அவரவர் விருப்பப்படி அமுது செய்விப்பார். நாள்தோறும் செய்த இம்மாகேசுவரபூசை என்னும் சிவபுண்ணியத்தால் அவரது செல்வ்ம் நாளுக்கு நாள் பெருகிக் குபேரனைப் போன்ற பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தார். அடியார்க்குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்யவல்லார் இந்நாயனார் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்தத் திருவுள்ளங் கொண்டார். இதனால் இளையான்குடிமாறறது செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கவும், தம்மனஞ்சுருங்குதலின்றித் தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மையே விற்றுக் கொடுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும் அடியார்க்கு அமுதளித்தலாகிய பணியை விடாது செய்து வந்தார்.

            இவ்வாறு மாரிக்காலத்தில் ஒருநாள், தாம் உணவின்றிப் பசியால் வாடியபோதும் இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால் கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவுப் பொழுதிலே சிவபெருமான் அடியார் கோலங்கொண்டு மாறனாரது மனைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத்தார். மாறன் கதவைத் திறந்து அடியாரை வீட்டினுள் அழைத்து திருமேனியை ஆடைகொண்டு துவட்டி இருத்தற்கு இடங்கொடுத்தார்; அடியார்க்குத் திருவமுது செய்வித்தல் வேண்டும் என்னும் பெருவிருப்புடன் ‘சிவனடியார் மிகவும் பசித்துள்ளார் என்ன செய்வது?”. முன்னமே நமக்கு இங்கு உணவில்லை. ஆயினும் இறையடியார்க்கு அமுதளித்தல் வேண்டுமே? இதற்கு யாது செய்வோம்? என வினாவினாள். அதுகேட்ட மனைவியார், ‘நம் வீட்டினில் ஒன்றும் இல்லை; அயலாரும் இனித் தருவாரில்லை. பகற்பொழுதும் போயிற்று. தேடிப்போதற்குரிய இடமும் வேறில்லை. தீவினையேன் என் செய்வேன்? என்று சொல்லி “இன்று பகற் பொழுதிலே வறுமை நீங்க வயலில் விதைத்த செந்நெல் முளையை வாரிக் கொண்டுவந்தால் இயன்ற அளவில் அமுது சமைக்கலாம். இதுவன்றி வேறுவழியறியேன்” என்றார்.

8. இயற்பகை நாயனார்


          இயற்பகையார் சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்ததினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைச் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்துவந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர் உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார்.

          சிவபெருமான் தூய திருநீறு பொன்மேனியில் அணிந்து, தூர்த்த வேடமுடைய வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது வீட்டினன அடைந்தார். நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று வழிபட்டு வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காது உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன், அதனை நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன் எனக் கூறினார். அது கேட்ட இயற்பகையார், என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதிற் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார். அதுகேட்ட வேதியர், ‘உன் மனைவியை விரும்பி வந்தேன் எனச் சொன்னார்’.

Saturday, February 5, 2011

எழுத்து இலக்கணம்




தமிழ் எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
எழுத்து இலக்கண வகைகள்:
1.     முதலெழுத்து
2.   சார்பெழுத்துகள்

முதலெழுத்துகள்       
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்

* உயிரெழுத்துகள்:
உயிரெழுத்துகள் 12 அவை:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
குறில்
குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ
நெடில்
நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ

* மெய்யெழுத்துகள்:
மெய்யெழுத்துகள் 18 அவை:
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:
வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்

சார்பெழுத்துகள்        
முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன.
சார்பெழுத்து பத்து வகைப்படும் அவை:
1. உயிர்மெய் எழுத்து
2. ஆய்த எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்

Tuesday, February 1, 2011

7. இடங்கழி நாயனார்


                 இடங்கழி நாயனார் தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார்; கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார்.

                 சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார். இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார்.

                 அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர்.

                 இடங்கழியார், அவரைப் பார்த்து, ‘நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்’ எனக் கேட்டார். அதுகேட்ட அடியவர், ‘நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்’ என்றார், அதுகேட்டு இரங்கிய மன்னர், ‘எனக்கு இவரன்றோ பண்டாரம்’ என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய்ச், ‘சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க’ என எங்கும் பறையறிவித்தார்.

                 அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

Translate