Search This Blog

Saturday, December 4, 2010

சைவ சமயம்


         சைவ சமயம், சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இம்மதத்தினை இன்று 2200 இலட்சம் மக்கள் பின்பற்றுகின்றனர்.

         பொருளடக்கம்

           1 சைவ சமயத்தின் தோற்றம்

           2 சைவத்தின் மூன்று பிரிவுகள்
           3 சைவ வழிபாட்டின் பண்புகள்

                                
 


சைவ சமயத்தின் தோற்றம்

         மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.

         அதேவேளை வேறு சில ஆதாரங்கள் சைவ சமயம் கி.பி. மத்திய இந்தியாவில் தோன்றி பின்னர் தென்னிந்தியாவுக்கு பரவியாதாக தெரிவிக்கின்றன.


 

சைவத்தின் மூன்று பிரிவுகள்

இன்று நிலவும் சைவத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. காஷ்மீர சைவம்
2. வீர சைவம்
3. சித்தாந்த சைவம்
இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.

    சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.


 

சைவ வழிபாட்டின் பண்புகள்

              பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டுப் பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்.

     சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.

No comments:

Post a Comment

Translate